கோடை சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணி தீவிரம்
கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடிக்காக நிலத்தை தயார் படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடிக்காக நிலத்தை தயார் படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோடை சாகுபடி
கும்பகோணம் பகுதியில் சம்பா தாளடி அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மின் மோட்டார் பம்பு வசதி உள்ள விவசாயிகள் தங்களது சாகுபடி நிலத்தில் தண்ணீர் நிரப்பி டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கோடை சாகுபடிக்காக தங்களது நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றங்கால் அமைத்து விதை தெளித்துள்ள விவசாயிகள் விதை நாற்றுகள் வளர்வதற்குள் நிலங்களை நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் தயார் படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வெப்பம்
கடந்த சம்பா தாளடி சாகுபடியின் போது அபரிமிதமான மழையால் தேவைக்கு அதிகமான தண்ணீர் விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் மிதமிஞ்சிய தண்ணீரால் பெருவாரியான விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த சாகுபடியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது கோடை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் கோடை நடவுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது. இருப்பினும் மின் மோட்டார் வசதி உள்ள விவசாயிகள் தற்போது சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளோம். கடந்த சில தினங்களாக நிலவிய கடும் வெப்பத்தால் சாகுபடி நிலங்கள் இறுகி போய் உள்ளது.
நடவு பணி
எனவே நிலங்களை இலகுவாக்க ஏற்ற வகையில் தற்போது மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து டிராக்டரை கொண்டு உழுது நிலங்களை சமப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து நாற்றங்காலில் வளர்ந்துள்ள நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த கோடை சாகுபடி ஓரளவு கடந்த சாகுபடியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story