கோபி அருகே நம்பியூரில் பரபரப்பு தி.க. தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில் கல்வீச்சு-இளைஞர் அணி செயலாளர் காயம்; மர்ம கும்பலை கைது செய்யக்கோரி தொண்டர்கள் சாலைமறியல்
கோபி அருகே நம்பியூரில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் இளைஞர் அணி செயலாளர் காயம் அடைந்ததால் மர்மநபர்களை கைது செய்யக்கோரி தொண்டர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நம்பியூர்
கோபி அருகே நம்பியூரில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் இளைஞர் அணி செயலாளர் காயம் அடைந்ததால் மர்மநபர்களை கைது செய்யக்கோரி தொண்டர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளா் மணிமாறனை ஆதரித்து நம்பியூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
லட்சிய கூட்டணி
மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து தேர்தலை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மோடி ஆட்சியில் விவசாயிகள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். மாணவர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தான் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காலத்தில் கைதட்டவும், விளக்கேற்றவும் மோடி கூறினார். இதனால் எல்லாம் கொரோனா போகாது. பகுத்தறிவுடன் சிந்தித்து கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
தி.மு.க. கூட்டணி தேர்தலுக்காக உருவான கூட்டணியோ, தேர்தலில் உருவான கூட்டணியோ இல்லை. பெண்ணுரிமை பாதுகாக்க, நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் உருவான கூட்டணி. ஆனால் கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லாதது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஆகும். இது பதவி வெறி, மத வெறி, சாதி வெறியில் உருவான கூட்டணி. ஆனால் தி.மு.க. கூட்டணியோ லட்சிய கூட்டணி.
நோட்டாவோடு...
20 தொகுதிகளில் நோட்டாவோடு போட்டி போடும் பா.ஜ.க. நாங்கள் தான் ஆட்சி அமைக்க போகிறோம் என்று கூச்சம் இல்லாமல் பேசுகின்றனர்.
நுழைவுத்தேர்வே கூடாது என்று சட்டம் இயற்றியவர் கருணாநிதி. ஆனால் நீட் தேர்வால் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தேர்வால் நமது குழந்தைகள் மருத்துவர் ஆகும் கனவு தகர்ந்துவிட்டது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் இந்தியாவின் கதாநாயகன். இதில் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சியும் எடுப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து என்று ஒரு வரி கூட இல்லை. இதில் இருந்தே தெரிகிறது அ.தி.மு.க.வின் மோசடி. வெளி மாநிலத்தவர் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெறுவதை தடுக்க தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிக்கே தற்போது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வீசி தாக்குதல்
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென பொதுக்கூட்ட மேடையை நோக்கி கற்களை வீசி தாக்கியது. இதில் மேடையின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெற்றிவேல் மீது கல் ஒன்று விழுந்தது. இதனால் அவர் காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் வெற்றிவேலை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாலை மறியல்
இதற்கிடைேய சிறிது நேரத்தில் கூட்டம் முடிந்தது. கூட்டம் முடிந்ததும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நம்பியூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நம்பியூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறுகையில், ‘கல் வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக கைது செய்ப்படுவார்கள்,’ என்றனர். இதில் சமரசம் அடைந்த கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக நம்பியூர் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில் கல் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story