புதுச்சத்திரம் அருகே விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை; அண்ணன், அண்ணி கைது


புதுச்சத்திரம் அருகே விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை; அண்ணன், அண்ணி கைது
x
தினத்தந்தி 26 March 2021 4:24 AM IST (Updated: 26 March 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை; அண்ணன், அண்ணி கைது

நாமக்கல், மார்ச்.26-
புதுச்சத்திரம் அருகே விவசாயி தலையில் கல்லைப்போட்டு கொன்ற வழக்கில் அவரது அண்ணன் மற்றும் அண்ணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 61). விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (45). அதே பகுதியில் வசித்து வருபவர் பழனிவேலின் தம்பி அண்ணாதுரை (50). இவரும் விவசாயம் செய்து வந்தாா். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
பழனிவேலுக்கும், அண்ணாதுரைக்கும் சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அண்ணன், தம்பிகள் இருவரும் பாகம் பிரிக்காமல் ஒன்றாக விவசாயம் செய்து வந்தனர். இதற்கிடையே 4½ ஏக்கர் நிலத்தை அண்ணாதுரைக்கு தெரியாமல் பழனிவேல் தனது மனைவி பழனியம்மாளின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயக்கடன் வாங்கி உள்ளார்.
இந்த விவசாயக்கடன் தற்போது தள்ளுபடி ஆகி உள்ளது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிந்த அண்ணாதுரை இதுகுறித்து பழனிவேலிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
தலையில் கல்லைப்போட்டு கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு 8 மணி அளவில் அண்ணாதுரை தோட்டத்தில் தனியாக நடந்து சென்று உள்ளார். இதனை பார்த்த பழனிவேலும், பழனியம்மாளும் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதையடுத்து அங்கு சென்ற கணவன், மனைவி இருவரும் அண்ணாதுரையை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அண்ணாதுரையின் தலையில் கல்லைப்போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து பழனிவேலும், பழனியம்மாளும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அண்ணன்-அண்ணி கைது
இந்த படுகொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பழனிவேல் மற்றும் அவரது மனைவி பழனியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story