60 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது
நல்லூரில் நடந்த வாகன சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
நல்லூர்
நல்லூரில் நடந்த வாகன சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் க.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு) க.சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருப்பூர் மாநகரம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான தனிப்படையினர் கோவில் வழியில் இருந்து முத்தனம்பாளையம் செல்லும் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிளை சோதனை செய்தனர்.
கஞ்சா பறிமுதல்
இதில் காரில் சுமார் 60 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். இந்த கஞ்சாவை கடத்தி வந்ததாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கொளத்துப்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரான காசிராஜன் என்பவர் தப்பி தலைமறைவாகி விட்டார். மேலும் கஞ்சா கடத்திவர பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட செல்வம் என்பவர் மீது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கும் உள்ளது. தீவிரமாக சோதனை மேற்கொண்டு 60 கிலோ கஞ்சாவை கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Related Tags :
Next Story