வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்; ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம்
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாண்டையார் இருப்பு பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.தொடர்ந்து அவர் கரைமீண்டார்கோட்டை, ராகவாம்பாள்புரம், மூர்த்தியம்பாள்புரம், நெய்வாசல், சின்னப்பொன்னாப்பூர், தலையாமங்கலம், பனையக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். மாலையில் பொன்னாப்பூர் மேற்கு, பொன்னாப்பூர் கிழக்கு, கீழஉளூர்,
பருத்திக்கோட்டை, மேலஉளூர், ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார்.
வைத்திலிங்கம் பேச்சு
அப்போது வாக்காளர்களிடம் வைத்திலிங்கம் பேசியதாவது:-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் ரூ.1,500 வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்கியது போல, தற்போது விலையில்லா வாஷிங்மெஷின் வழங்கப்படும். ஒவ்வொரு
குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளருடன் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உடன் சென்றனர். வேட்பாளர் செல்லும் கிராமங்களில் கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார்.
Related Tags :
Next Story