அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கேபிள் இணைப்பு கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்; தஞ்சை தொகுதி வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்
அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக கேபிள் இணைப்பு கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.
அறிவுடைநம்பி பிரசாரம்
தஞ்சை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.அறிவுடைநம்பி போட்டியிடுகிறார். அவர் நேற்று தஞ்சை 44-வது வார்டான தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ராஜீவ்நகர், நாகை சாலை மற்றும் 33-வது வார்டு ஆகிய இடங்களில் திறந்த ஜீப்பில் சென் றுவாக்கு சேகரித்தார்.மாலையில் 43, 45, 46, 47 ஆகிய வார்டுகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் திரண்டு நின்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் வேட்பாளர் அறிவுடைநம்பி திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தஞ்சை மாவட்டம் வளர்ச்சி
அப்போது அறிவுடைநம்பி பேசியதாவது:-
அ.தி.மு.கவின் தொடர்ந்து 10 ஆண்டுகால ஆட்சியில் சாலைவசதி, மின் வசதி, குடிநீர் வசதி என மக்களின் அடிப்படை வசதிகள் தீர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.1995-ம் ஆண்டு தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது தொம்பன்குடிசையாக இருந்த தஞ்சை மாநகரின் நுழைவு வாயில் பகுதியில் தொல்காப்பியர் சதுக்கத்தை அமைத்தார். தற்போது இந்த பகுதியும் தொல்காப்பியர் நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. 20 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. இந்த 20 ஆண்டுகால ஆட்சியில் தான் தஞ்சை மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தி.மு.க. நிறைவேற்றவில்லை
தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்ப்பல்கலைக்கழகம், புதிய பஸ் நிலையம், மேம்பாலங்கள் கட்டியது அ.தி.மு.க. ஆட்சியில் தான். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பல்வேறு நவீன உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பான மருத்துவசேவை அளிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பகுதியிலும் குறைகளை, அ.தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள்
மட்டும் அல்ல, அ.தி.மு.க. கட்சி தொண்டர்களே மக்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் என்னிடம் தெரிக்கும் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
இலவச கேபிள் இணைப்பு
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி, அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும். யு.பி.எஸ்.சி., நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜெ.இ.இ., டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், உயர்தர பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள்,
முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்.திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு வழங்கப்பட்டு வரும் தங்கத்தோடு, பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரமாகவும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் ரூ.35 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.நகர பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு பஸ் கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்.
பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாக சென்று வழங்கப்படும். விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். மேலும் ஒ்வவொரு குடும்பத்துக்கும் இலவசமாக கேபிள் இணைப்பு கிடைக்க அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளருடன், கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் நெப்போலியன்சேவியர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story