மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் திருவிழா 33 அடி உயர தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
33 அடி உயர தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே மேல்பாதி கிராமத்தில் பழமைவாய்ந்த திரவுபதியம்மன், தர்மராஜா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி திருவிழாவின்போது பக்தர்கள் 33 அடி உயரம் உள்ள தேரை தூக்கியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர் எல்லையில் உள்ள கோட்டைக்கு செல்வார்கள். பின்னர் அங்கு அரவான் பலி நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தவுடன் தேரை பக்தர்கள் கோவிலுக்கு தூக்கி வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை திரவுபதியம்மன், அர்ச்சுனன், மகாவிஷ்ணு, விநாயகர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 33 அடி உயரம் கொண்ட தேரில் அர்ச்சுனன் எழுந்தருளினார். அதன்பிறகு பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதியின் வழியாக ஊர் எல்லையில் உள்ள கோட்டையை சென்றடைந்தனர்.
பின்னர் மாலை மகாபாரத சொற்பொழிவு, கோட்டையை கலைப்பது மற்றும் அரவான் களப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பிறகு பக்தர்கள் தேரை தூக்கிக் கொண்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் நடந்த தீமிதிருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story