கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 March 2021 11:10 PM IST (Updated: 26 March 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியான நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 51 வயது ஆண். இவர் கடந்த சில நாட்களாக இருமல், சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதிப்பட்டார். இதனால் அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

 இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதிப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 8 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 126 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 110 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இந்த நிலையில் 12 நாட்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story