பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிப்பு குழுவினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும்  வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  கண்காணிப்பு குழுவினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 26 March 2021 11:16 PM IST (Updated: 26 March 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விழுப்புரம், 
பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடமாடும் கண்காணிப்பு குழுவினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்தல் முடிந்து அவற்றை வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லவும் காவல்துறை சார்பில் நடமாடும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த குழுவில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 176 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் காவலர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாவட்ட காவல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நடமாடும் கண்காணிப்பு குழுவில் உள்ளவர்கள், வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வழித்தடங்கள் பற்றிய வரைபடத்தினை கையிலேயே வைத்திருக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரிய இடத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச்சென்று வாக்குச்சாவடியில் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஏப்ரல் 5-ந் தேதியன்று இரவு 8 மணிக்குள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதன் விவரத்தை மாவட்ட தனிப்பிரிவு காவல் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். சுற்றுக்காவல் பொறுப்பு அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பெற்றுக்கொண்டனரா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் பழுதில்லாமல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வாக்குச்சாவடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுகள் தடையின்றி நடைபெறுகிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படும் இடங்களுக்கு காலதாமதமின்றி விரைந்து சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறிவுரை

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவிற்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசை முறைப்படுத்தி சேகரித்து வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்காவல் பொறுப்பினரும் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்கப்பட்ட நேரத்தை தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தனிப்பிரிவுக்கு அவ்வப்போது தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடியிலோ, வாக்கு எண்ணும் மையத்திலோ வேட்பாளரை தவிர அனுமதி பெறாத யாரையும் அனுமதிக்கக்கூடாது. வாக்குப்பதிவின்போது கூட்டமாக வரும் பொதுமக்கள் வாக்காளர் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பணி செய்ய வேண்டும். கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story