குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 March 2021 11:18 PM IST (Updated: 26 March 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வீரபாண்டி
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதிக்குட்பட்ட பாரதி நகர் மற்றும் செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வராததை கண்டித்து நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது வரை போதிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகிறோம். மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வைத்துக்கொண்டு குடிநீருக்காக பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நீக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டது.

Next Story