1371 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தொற்று பரவல் தடுப்பு மருத்துவ உபகரணங்கள்


1371 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தொற்று பரவல் தடுப்பு மருத்துவ உபகரணங்கள்
x
தினத்தந்தி 27 March 2021 12:03 AM IST (Updated: 27 March 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1371 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தொற்று பரவல் தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அந்தப் பொருட்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தரும்போது, அவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு கட்டுப்பாடு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1371 வாக்குச்சாவடி மையங்களுக்கு நோய் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு தனித்தனியாக  அட்டைப்பெட்டிகளில் 13 பொருட்கள் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனுப்பி வைக்கப்படுகிறது

அதில் உடல் வெப்பமானி, கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி பாட்டில்கள், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முகக் கவசம், வாக்காளர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஒரு முறை பயன்படுத்தப்படும் கையுறை, முகக் கவசம், கொரோனா பாதித்த வாக்காளர்களுக்கு உடல் முழுவதும் மறைத்து வாக்களிக்க கிட்டுகள், மருத்துவக் கழிவுகளை போடும் பிளாஸ்டிக் குப்பைத்தொட்டி, குப்பையை வெளியே கொண்டு செல்ல மஞ்சள் பைகள் என மருத்துவப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கு பேக்கிங் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள், பாதுகாப்பு மருந்துகள் கொண்டு செல்லப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story