தமிழை ஐகோர்ட்டு மொழியாக்கக்கோரிய வழக்கு
தமிழை ஐகோர்ட்டு மொழியாக்கக்கோரிய வழக்கு
மதுரை,மார்ச்.
மதுரை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் இளங்கோ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதிகள் அமர்வு தமிழ், குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளை ஐகோர்ட்டு மொழியாக்க முடியாது என தீர்மானித்தது. ஆனால் ராஜஸ்தான் மாநில வக்கீல் ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் அனுப்பிய கடிதத்தில் இந்தியை சுப்ரீம் கோர்ட்டின் மொழியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது போல வக்கீல்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதிடுவதை அங்கீகரிக்க மறுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் இந்திய ஆட்சிமொழிச் சட்டத்திற்கு எதிரானதாகும். கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஐகோர்ட்டின் மொழியாக அந்தந்த மாநில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்க தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டை காரணம் கூறி, மத்திய அரசு தமிழ் மொழிக்கான உரிமையை மறுத்து வருகிறது. எனவே தமிழை ஐகோர்ட்டு மொழியாக்குவது குறித்த கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒப்புதலுக்கு அனுப்பாமல், நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று தமிழை ஐகோர்ட்டு மொழியாக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story