கோவையில் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது


கோவையில் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது
x
தினத்தந்தி 27 March 2021 1:43 AM IST (Updated: 27 March 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோவையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு படிபடியாக உயர்ந்து உச்சத்துக்கு சென்ற கொரோனா இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. 

ஆனால் தற்போது கோவையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்குதலுக்கு தினமும் 150 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.


இந்தநிலையில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோவையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கோவையை அடுத்த போத்தனூர் மாரியப்பகோனார் வீதியில் உள்ள ஒரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து அந்த சிறுவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசு மூலம் பரவுவதால் அந்த சிறுவன் வசித்து வந்த வீடு மற்றும் வீதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, புகை தெளிப்பான் கருவி மூலம் கொசு ஒழிப்பு மருந்து புகை அடிக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதுபோன்று கோவையில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக மழை காலங்களில் தான் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவு இருக்கும். ஆனால் தற்போது வெயில் காலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. 
கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் சேர்ந்து பரவி வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story