தி.மு.க. பிரமுகர் வீட்டில் 3 மணி நேரம் வருமானவரி சோதனை


தி.மு.க. பிரமுகர் வீட்டில் 3 மணி நேரம் வருமானவரி சோதனை
x
தினத்தந்தி 27 March 2021 2:15 AM IST (Updated: 27 March 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் 3 மணி நேரம் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவிடைமருதூர்;
ஆடுதுறை அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் 3 மணி நேரம் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
தி.மு.க. வார்டு செயலாளர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி 1-வது வார்டு நமச்சிவாயபுரம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ரவி, முனுசாமி, காமராஜ். சகோதரர்களான இவர்கள், தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இவர்களில் முனுசாமி, தி.மு.க.வின் வார்டு செயலாளராக உள்ளார்.
இவர்கள் வீடு அருகே நேற்று மாலை தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ‘தேர்தல் அவசரம்’ என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட கார் ஒன்று வந்தது. அதில் வந்தவர்கள் தாங்கள் வருமான வரித்துறையை சேர்ந்த தேர்தல் சிறப்பு அதிகாரிகள் என்றும் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்றும் முனுசாமியிடம் கூறினர். 
வருமான வரி அதிகாரிகள்
உடனே அங்கு திரண்ட தி.மு.க.வினர் மற்றும் முனுசாமி குடும்பத்தினர் தாசில்தார், போலீசார், வீடியோகிராபர் என யாரும் இல்லாமல் உங்களை அனுமதிக்க முடியாது என கூறி அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் திருவிடைமருதூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
3 மணி நேரம் சோதனை
இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரி வில்வநாதன் தலைமையில் 3 பேர், முதலில் முனுசாமி வீட்டிலும் அதனைத்தொடர்ந்து அவரது அண்ணன் ரவி, தம்பி காமராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை செய்தனர். வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று குடிநீர் தொட்டிகளில் டார்ச் லைட் அடித்து அதிகாரிகள் தொடர்ந்து 3 மணி நேரம் சோதனை செய்தனர்.வீட்டில் சமையலறையில் இட்லி மாவு பாத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் சல்லடை போட்டு அதிகாரிகள் சோதனை செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். மேலும் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப், கார்களிலும் சோதனையிட்ட அதிகாரிகள் தங்கள் சோதனை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காமல் வீட்டின் உரிமையாளர்களிடம் தாங்கள் எதையும் எடுத்து செல்லவில்லை என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.
வெற்றியை தடுக்க முடியாது
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் இளங்கோவன், தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.எம்.ராஜா, ம.தி.மு.க. சரவணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முனுசாமி வீட்டுக்கு திரண்டு வந்தனர். வருமானவரித்துறையினர் நடத்திய இந்த சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் கூறுகையில் மத்திய, மாநில அரசுகள் தவறான யுக்தியை கையாளுகிறது. சீப்பை மறைத்து விட்டால் கல்யாணம் நின்று போகும் என்ற கதையாக மிரட்டி பார்க்கிறார்கள். எங்கள் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்குத்தான் நாளுக்கு தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்றார்.

Next Story