தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர்
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு செலுத் தினர். இந்த பணியை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு செலுத் தினர். இந்த பணியை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
பயிற்சி வகுப்பு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு கடந்த வாரம் முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அப்போது தபால் வாக்கு அளிப்பதற்கான விவரங்கள் கேட்டு பெறப்பட்டது. தபால் வாக்களிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு கவரில் தபால் வாக்கு அளிக்கும் முறை குறித்த குறிப்புகள், ஓட்டுசீட்டு ஒப்புகை கடிதம் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்தநிலையில் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் 8 தொகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. தஞ்சை சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தஞ்சை பாரத் கலைக்கல்லூரியில் நடந்தது.
தபால் வாக்கு
இதில் கலந்து கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவர்களுக்கான தபால் வாக்குச்சீட்டை கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு தபால் வாக்கு அளித்தனர். இதற்காக தனி அறையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொருவராக சென்று தபால் வாக்கை அந்த பெட்டியில் செலுத்தினர்.
இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் வெப்பமானி கொண்டு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டதுடன் கைகளை சுத்தம் செய்து முகக்கவசம் அணிவதை உறுதி செய்துள்ளோம். அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்களிக்கும் பணி சுமுகமாக நடந்தது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் பார்வையாளர்களும், அந்தந்த மையங்களில் நடந்து வரும் இந்த பணியை ஆய்வு செய்து வருகின்றனர். அனைவரும் தபால் வாக்களித்த பிறகு பெட்டியானது பாதுகாப்பாக திறக்கப்பட்டு அந்தந்த தொகுதி வாரியாக சேகரிக்கப்பட்டு எத்தனை பேர் தபால் வாக்களித்துள்ளனர் என்ற விவரம், தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதியிலும் தபால் வாக்களிக்கும் பணி சுமுகமாக நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தஞ்சை சட்டசபை தொகுதி அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான வேலுமணி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story