நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட்டனர்
நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட்டனர்.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று தபால் ஓட்டு போட்டனர்.
2-ம் கட்ட பயிற்சி
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,925 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணிக்காக நெல்லை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 236 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த 18-ந்தேதி நடந்தது. நேற்று 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. தேர்தல் அலுவலர்கள் பணியாற்றும் தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தொகுதிக்கு நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நெல்லை-நாங்குநேரி
அதேபோல் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.
நாங்குநேரி தொகுதிக்கு வள்ளியூர் கெயின்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், ராதாபுரம் தொகுதிக்கு செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் பள்ளியிலும், அம்பை தொகுதிக்கு சேரன்மாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியிலும் பயிற்சி வகுப்புகள் நடந்தது.
தபால் ஓட்டு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி நடைபெற்ற இடத்திலேயே தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் நேற்று மதியம் தபால் ஓட்டு போட்டனர்.
ஒரு தொகுதிக்கு 600 முதல் 700 தபால் ஓட்டுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் ஓட்டு போட உள்ளனர்.
Related Tags :
Next Story