பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 March 2021 2:44 AM IST (Updated: 27 March 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊழியர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை 9.15 மணி அளவில் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலைக்கு திரண்டு சென்றனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள், குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். மேலும் சிட்டுக்குருவி, காகம் உள்ளிட்ட பறவைகளும் பாதிக்கப்படும். ஆகவே  குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதை கேட்ட போலீசார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story