ஆலந்துறையார் கோவிலில் திருக்கல்யாணம்
ஆலந்துறையார் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள அருந்தவ நாயகி சமேத ஆலந்துறையார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆலந்துறையாருக்கும், கமலாம்பிகை, நீலாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக அருந்தவநாயகி என்றழைக்கப்படும் கவுரி அம்மனுக்கும், ஆலந்துறையார் என்றழைக்கப்படும் சோமாஸ்கந்தருக்கும் எண்ணெய், மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யாகபூஜை நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் ஓத ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் அருந்தவ நாயகி கழுத்தில் ஆலந்துறையார் தாலி கட்ட திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அட்சதை தூவினர்.
பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அருந்தவநாயகி அம்மனும், ஆலந்துறையாரும் முத்துப் பல்லக்கில் ஏற்றப்பட்டு திருமண கோலத்தில் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். இதில் வீடுகள் தோறும் பக்தர்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story