முதியோர்- மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம்


முதியோர்- மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம்
x
தினத்தந்தி 26 March 2021 9:35 PM GMT (Updated: 26 March 2021 9:35 PM GMT)

பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் இன்று முதல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம்.

பெரம்பலூர்:

தபால் ஓட்டு போடலாம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் ஓட்டு போடலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய தொகுதிகளில் மொத்தம் 7,064 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 11,699 முதியோர் வாக்காளர்களும் உள்ளனர்.
இதில் பெரம்பலூர் தொகுதியில் 615 முதியோர் வாக்காளர்களும், 380 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 538 முதியோர் வாக்காளர்களும், 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என மொத்தம் 1,827 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம்.
அலுவலர்களுக்கு பயிற்சி
தபால் ஓட்டு போடுவதற்கு முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். உரிய நாளில் தங்களது வாக்கினை செலுத்திட வேண்டும். இந்த பணியில் மண்டல அலுவலர் அடங்கிய அலுவலர்கள் குழுவினர் ஈடுபடவுள்ளனர். அவர்கள் தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளர்களை அதிகபட்சமாக 2 முறை சந்தித்து வாக்களிக்க வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்வார்கள்.
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்காக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு அனுப்புவதற்கு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இன்று(சனிக்கிழமை) நடைபெறும் பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டுகள் வழங்கப்படவுள்ளது.

Next Story