ஆத்தூர் அருகே ஆற்றில் குதித்து தற்கொலை நாடகமாடிய தொழிலாளிக்கு எச்சரிக்கை


ஆத்தூர் அருகே ஆற்றில் குதித்து தற்கொலை நாடகமாடிய தொழிலாளிக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 March 2021 4:38 AM IST (Updated: 27 March 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே ஆற்றில் குதித்து தற்கொலை நாடகமாடிய தொழிலாளியை போலீசார் எச்சரித்தனர்.

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் கண்ணன் (வயது 24). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  நேற்று முன்தினம் மதியம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கண்ணன், வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. உடனே அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் செல்லியம்பாளையம் வசிஷ்ட நதி ஆற்றில் குதித்துள்ளார். இதனிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள், போலீசார் இரவு 9 மணிவரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனிடையே நேற்று காலை கண்ணன் வீடு திரும்பினார். அவரிடம் விசாரித்த போது ஆற்றில் குதித்து விட்டு மறுகரையில் எழுந்து சென்றதும், இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர், போலீசார் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளி கண்ணனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story