ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் வீதி உலா
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க அறுபத்து மூவர் வீதி உலா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதைதொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான அறுபத்து மூவர் வீதி உலா நேற்று நடைபெற்றது. அதன்படி, கபாலீசுவரர் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை, சிவநேச செட்டியார் ஆகியோருக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம்.
அறுபத்து மூவர் வீதி உலாவையொட்டி, கபாலீசுவரர் வெள்ளி வாகனத்தில் கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அதேபோல் கற்பகாம்பாள், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் ஐம்பொன் வாகனத்தில் தனித்தனியே எழுந்தருளினர். இவர்களுக்கு முன்னால் திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை, சிவநேச செட்டியார் ஆகியோர் தனித்தனி பல்லக்கில் வந்து இறைவனை தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் வாகனத்திற்கு 4 பேர் வீதம் 16 சிறிய வாகனங்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு கபாலீசுவரர் வாகனத்தின் முன்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சைவ குறவர்களும் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் மேள தாளம், சங்க நாதம், பஞ்சவாத்தியம் முழங்க அறுபத்து மூவர் வீதி உலா நிகழ்ச்சி தொடங்கியது.
வீதி உலாவில் மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன் வாகனம் முதலில் செல்ல அதைதொடர்ந்து பிள்ளையார் வாகனம் மற்றும் திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை, சிவநேச செட்டியார் ஆகியோரின் பல்லக்குகள், 63 நாயன்மார்கள் வாகனங்கள் செல்ல அவர்களை தொடர்ந்து கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சண்டிகேசுவரர் வாகனங்களும் தொடர்ந்து சென்றன.
அதைதொடர்ந்து திருவள்ளுவர்-வாசுகி எழுந்தருளிய வாகனம், மந்தைவெளி சிங்கார வேலர் வாகனங்களும் வரிசையாக சென்றன. மேலும் முண்டகக்கண்ணி அம்மன், வீரபத்திரர் சுவாமிகள் வாகனங்களும் வீதி உலா வந்தன. அறுபத்து மூவர் வீதி உலாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 4 மாட வீதிகளிலும் பெண்கள் சாமிக்கு இனிப்புகளை படைத்து வழிபட்டுவிட்டு, அவற்றை மக்களுக்கு வழங்கினர். ஆங்காங்கே அன்னதானங்கள் மற்றும் நீர் மோர், இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிறைவாக நேற்று இரவு 63 நாயன்மார்கள் வாகனங்களும் மீண்டும் கோவில் கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு வந்தடைந்து வீதி உலா நிறைவடைந்தது. வீதி உலாவின் போது, பக்தர்கள், கபாலீ... ஓம் நமச்சிவாய... தென்னாடுடைய சிவனே போற்றி... போன்ற கோஷங்களை எழுப்பினர்.
விழாவில் முன்னதாக, திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், ‘அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடைபெற்றது. அறுபத்து மூவர் வீதி உலாவையொட்டி, போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story