திண்டுக்கல்லுக்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு


திண்டுக்கல்லுக்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 27 March 2021 8:17 PM IST (Updated: 27 March 2021 8:17 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லுக்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் பழனியில் 405, ஒட்டன்சத்திரத்தில் 352, ஆத்தூரில் 407, நிலக்கோட்டையில் 342, நத்தத்தில் 402, திண்டுக்கல்லில் 397, வேடசந்தூரில் 368 என மொத்தம் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகள் சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி 7 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
அதில் நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளை தவிர இதர தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னங்கள், நோட்டா ஆகியவை மட்டுமே இடம்பெறும் வசதி உள்ளது. இதனால் மீதமுள்ள 5 தொகுதிகளுக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தும் நிலை உள்ளது.
கூடுதலாக வரவழைப்பு 
எனவே, கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயலட்சுமி, தேர்தல் பொது பார்வையாளர் சோமாபட்டாச்சார்ஜி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சரிபார்ப்பு பணி நிறைவுபெற்றதும் அவற்றையும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 305 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 தொகுதிகளுக்கும் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Next Story