சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், அலகுகுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், அலகுகுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
சங்கராபுரம்
காட்டுவன்னஞ்சூர்
சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பிற்பகல் 1.30 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், சிறிய தேர் இழுத்து சென்றபடி தீ மிதித்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் காட்டுவன்னஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
பாக்கம் பாலமுருகன் கோவில்
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணியளவில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் மதியம் 2 மணியளவில் கோவில் அருகில் உள்ள தீ குண்டத்தில் பக்தர்கள் அலகு குத்தியும், சிறிய தேர் மற்றும் உரல் ஆகியவற்றை இழுத்தபடி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதில் பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story