தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் ஆசிரியர்கள் தர்ணா; ஆர்ப்பாட்டம்


தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் ஆசிரியர்கள் தர்ணா; ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2021 10:17 PM IST (Updated: 27 March 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

தேனி உள்பட 3 இடங்களில் தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி:
தேனி உள்பட 3 இடங்களில் தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-ம் கட்ட பயிற்சி
தேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் 7 ஆயிரத்து 492 பேருக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 21-ந்தேதி நடந்தது. இதையடுத்து 2-ம்கட்ட பயிற்சி வகுப்பு தேனி, முத்துதேவன்பட்டி, ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் நடந்தது. இதில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றை கையாளுவது குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை தொடர்ந்து தபால் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கும் பணி நடந்தது. மேலும் பயிற்சி நடந்த மையங்களிலேயே தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் வகையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் தேனி, முத்துதேவன்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 மையங்களில் பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் பலருக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, தபால் ஓட்டு போட விண்ணப்பிப்பது தொடர்பான உறுதிமொழி படிவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் வாங்கியது செல்லாது என்றும், துணை தாசில்தார் அல்லது அவருக்கு உயர் பதவியில் உள்ள அதிகாரியிடம் கையொப்பம் பெற வேண்டும் என்றும் பயிற்சி மையங்களில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் முத்துதேவன்பட்டியில் தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்காத ஆசிரியர்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்ற படிவத்தையும் ஏற்றுக்கொண்டு தபால் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தேனி, ஆண்டிப்பட்டியிலும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டத்தால் பயிற்சி மையங்கள் நடந்த இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் வாங்கியவர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தி.மு.க.வினர் மறியல்
இதற்கிடையே தபால் வாக்குப்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக கூறி தேனி நகர், மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சி மையத்துக்கு, போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான தங்கதமிழ்செல்வன் தலைமையில் தி.மு.க.வினர் வந்தனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சினேகாவிடம், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்காதது குறித்து விளக்கம் கேட்டனர். அதிகாரிகளும், தி.மு.க.வினருக்கு விளக்கம் அளித்தனர்.
இருப்பினும் அதை ஏற்க மறுத்த தி.மு.க.வினர், ஆண்டிப்பட்டியில் பயிற்சி வகுப்பு நடந்த கல்லூரிக்கு சென்றனர். அந்த கல்லூரி முன்பு மதுரை சாலையில் அமர்ந்து தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். இந்த சம்பவத்தால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story