வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் கையுறைகளை அப்புறப்படுத்த சிறப்பு ஏற்பாடு


வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் கையுறைகளை அப்புறப்படுத்த சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 27 March 2021 10:57 PM IST (Updated: 27 March 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் கையுறைகளை அப்புறப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. கொரோனா காலத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு 6 முககவசம், கையுறை, முழு முககவசம் (பேஸ்ஷீல்டு), கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு வலதுகையில் அணியும் வகையில் பாலித்தீன் கையுறை வழங்கப்படுகிறது. அதனை அணிந்து சென்று வாக்களிக்க வேண்டும். அதன்பிறகு அங்கு வைக்கப்பட்டு உள்ள பையில் கையுறையை பாதுகாப்பாக போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.  இந்த பணிகளை மேற்கொள்வதற்காக 4 ஆயிரத்து 194 கட்சி சாராத இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாக்காளர்கள் பயன்படுத்திய கையுறைகளை தனியாக ஒரு பையில் சேகரித்து வைக்கப்படுகிறது.  இதனை சேகரிப்பதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 62 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று, உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து அப்புறப்படுத்த உள்ளனர்.  அவர்கள் சேகரிக்கும் கையுறைகளை அந்தந்த தாலுகா தலைமை ஆஸ்பத்திரிகளில் கொண்டு சேர்க்க உள்ளனர். அங்கிருந்து மருத்துவ கழிவுகளை அழிக்கும் நிறுவனம் மூலம் எடுத்து சென்று அழிக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story