பங்குனி உத்திர விழா: மயிலம் முருகன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


பங்குனி உத்திர விழா: மயிலம் முருகன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 27 March 2021 11:02 PM IST (Updated: 27 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர விழாவையொட்டி மயிலம் முருகன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவ மலை மீது  வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை சமேத முருகன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.

இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து தினசரி முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி மலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் முருகனுக்கு திருகல்யாண உற்சவமும், வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலைவலம் வரும் காட்சியும் நடந்தது.

தேரோட்டம்

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.
காலை 6 மணிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் விநாயகர் தேரையும்,  பின்னர் முருகன் தேரையும் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.

காவடி எடுத்து நேர்த்திக்கடன்

அதை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்கிற பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

மலையை சுற்றி திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி வந்தது காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விநாயகர் தேர் காலை 6.50 மணிக்கும், முருகன் தேர் 7.15 மணிக்கும் நிலையை வந்தடைந்தது.

இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் அலகு குத்தியும், பால், பன்னீர்காவடி, புஷ்ப காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்
கடன் செலுத்தினர்.

தீர்த்தவாரி

திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் 10-வது நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவமும், இரவில் தெப்ப உற்சவமும், நாளை(திங்கட்கிழமை) இரவு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடைபெற இருக்கிறது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம்பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.

Next Story