திண்டிவனத்தில் பரபரப்பு; மரத்தில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை - முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு


திண்டிவனத்தில் பரபரப்பு; மரத்தில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை - முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 27 March 2021 11:07 PM IST (Updated: 27 March 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மரத்தில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இறையானூர் காலனி ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் அருணாசலம் என்கிற ராமஜெயம் (வயது 18). பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் பாவாடை ராயன். இவரது மகள் அபிநயா ( 16). இவர் கொந்தமூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

எதிர்எதிர் வீடு என்பதால் அடிக்கடி பார்த்து பேசி வந்துள்ளனர். இதில் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே  அருணாசலத்திற்கு, அபிநயா தங்கை முறை என்பதால், இருவர் வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் அவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினர்

இதையடுத்து கடந்த 25-ந்தேதி மதியம் வீட்டில் இருந்து, அருணாசலம், அபிநயா ஆகியோர் வெளியேறினர். இவர்கள் மாயமானது குறித்து அவர்களது பெற்றோர் கிளியனூர் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று திண்டிவனம் அருகே உள்ள கர்ணாவூர் பாட்டை பகுதியில் உள்ள ஓடைப்பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில்  2 பேர் தூக்கில் பிணமாக தொங்குவதாக திண்டிவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர். 

அதில், வீட்டில் இருந்து மாயமான அருணாசலம், அபிநயா என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் அவர்கள் அங்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த 2 பேரின் உடலையும் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். 

பின்னர் போலீசார், அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது குறித்து கிடங்கல்-1 பகுதி கிராம நிர்வாக அலுவலர் சூரியராஜன் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story