கூடுதல் வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்க வேண்டும்


கூடுதல் வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 March 2021 11:18 PM IST (Updated: 27 March 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் பணிச்சுமையை குறைக்க கூடுதலாக வாக்குச்சாவடி அலுவலரை நியமிக்க வேண்டும். என்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

 சட்டசபை தேர்தலில் பணிச்சுமையை குறைக்க கூடுதலாக வாக்குச்சாவடி அலுவலரை நியமிக்க வேண்டும். என்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதசாகு மற்றும் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சவாடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 மற்றும் 3, நியமனம் செய்யப்பட்டு இரண்டாம் கட்ட பயிற்சி மார்ச் 26-ந் தேதியுடன் முடிந்துள்ளது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்ரல் மாதம் 5-ந் தேதியில் பணியாற்றும் வாக்குச்சாவடிக்கான ஆணை வழங்கப்பட உள்ளது.
 இப்பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலர் 2-ன் பணி மற்ற அலுவலர்களின் பணிகளை விட அதிகமாக உள்ளது. அதாவது 17 (அ) பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், வாக்காளர் ரசீதில் கையொப்பமிட்டு வழங்குதல் என பல்வேறு பணிகளை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக 17 (அ) பதிவேடு மிக முக்கியமான பதிவேடு என்பதால் அதில் வாக்காளர் வாக்களிக்கப் பயன்படுத்தும் அடையாள அட்டையின் எண்னை எழுதுவதோடு, வாக்காளரிடம் கையொப்பமும் பெறவேண்டும்.

கூடுதல் அலுவலர்கள்

 17 (அ) பதிவேடு சட்டப்பூர்வமான மிக முக்கிய ஆவணம் என்பதால் பதிவுகள் விடுதலின்றி துல்லியமாகவும், அடித்தல் திருத்தலின்றி பதிவு செய்தல் வேண்டும். அதன் பின் அழியாத மையை விரலில் வைத்துவிட்டு வாக்காளர் ரசீதில் விபரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்க வேண்டும். இறுதியில் வாக்காளர் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால் அதற்கான பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும். இவையனைத்தும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் காலதாமதம் ஆவதோடு அதிக பணிச்சுமையும் ஏற்படுகிறது.
வாக்குச்சீட்டு நடைமுறை உள்ள தேர்தல்களில் அழியாத மை வைப்பதற்கு தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டார். வாக்குப்பதிவு எந்திரம் நடைமுறைக்கு வந்த பின்னால்தான் அழியாத மை வைக்கும் பணி கூடுதலாக வாக்குப்பதிவு அலுவலர் 2-ன் இடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 100 சதவீத வாக்குப்பதிவை முழுமையாக நிறைவேற்றவும் வாக்குப்பதிவு அலுவலர் 2-ன் பணிகளை பகிர்ந்துகொள்ள அழியாத மை வைக்க கூடுதலாக வாக்குப்பதிவு அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story