வாகன சோதனையில் 11½ கிலோ நகைகள் சிக்கியது
வடலூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 11½ கிலோ நகைகள் சிக்கியது.
குறிஞ்சிப்பாடி,
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர் அருகே ஆபத்தாரணபுரத்தில் உள்ள சென்னை-கும்பகோணம் சாலையில் பறக்கும் படை அதிகாரி விமலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனையில் ஈடுபடடிருந்தனர்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் இருந்த 2 பெட்டிகளில் 11 கிலோ 667 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.5 கோடி நகைகள்
இதுகுறித்து வேனில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள், நாங்கள் சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து வருவதாகவும், இந்த நகைகள் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள நகைக்கடை கிளைகளுக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் அவர்களிடம் இல்லை. இதையடுத்து நகைகள் உள்ள அந்த 2 பெட்டிகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாகன சோதனையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story