கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக செயல்படுகிறது ஜி.கே.வாசன் பேச்சு
கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக செயல்படுகிறது என அரவக்குறிச்சியில் ஜி.கே.வாசன் கூறினார்.
அரவக்குறிச்சி
ஜி.கே.வாசன் பிரசாரம்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கே. அண்ணாமலையை ஆதரித்து அரவக்குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை வித்தியாசமானவர் என்பதை தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய தொகுதி மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உயர்ந்த ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு உங்களுக்காக சேவை செய்ய வந்துள்ளார். இவர் நிர்வாக திறமையில் மிக சிறப்பாக செயல்பட கூடியவர்.
இந்தியாவில் முதல் மாநிலம்
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஒரு மக்களாட்சி நடைபெறுகிறது. இந்தியா பாதுகாப்பான நாடாக மட்டுமல்ல வளர்ந்து கொண்டிருக்கும் நாடாக செயல்படுகிறது. ஒரு நல்ல அரசாக செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்.
தமிழகத்தில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சாமானியர்களாக அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே வியக்கத்தக்க வளர்ச்சியை தமிழகம் பெற்றிருக்கிறது. ஆளுமையில் தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாக உள்ளது.
தோற்கடிக்க வேண்டும்
கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அமைதியான, ஆரவாரமில்லாத, சொன்னதை செய்யும் வாக்குறுதியை நிறைவேற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற கூட்டணி அ.தி.மு.க. இங்கு வடிகட்டிய பொய்யை சொல்லி மக்களை பிரிக்க நினைக்கின்ற பிரிவினைவாதிகளை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினையை பேசாமல் சட்டமன்றத்திற்கு உள்ளே, வெளியே என்று வெளிநடப்பு செய்தது தான் அவர்கள் செய்த சாதனை.
வெற்றி பெற செய்யுங்கள்
வாங்கி பழக்கம் உள்ளவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். கொடுத்து பழக்கம் உள்ளவர்களுக்கு வாக்களியுங்கள். சிறுபான்மை மக்களுக்கு பரிவாக பேசும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நமது வேட்பாளர் அண்ணாமலைக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story