பால் வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்


பால் வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 28 March 2021 1:27 AM IST (Updated: 28 March 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பால் வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை, மார்ச்
மதுரை கான்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 53). இவர் அனுப்பானடியில் பால் பண்ணை வைத்து மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு பண்ணையில் இருந்து கான்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேல அனுப்பானடி பகுதியில் செல்லும் போது பின்னால் வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகராஜன் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நாகராஜன் மூளைச்சாவு அடைந்தார். மூளை செயல் இழந்து இருந்தாலும் மற்ற பாகங்களான நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்தன. 
நாகராஜனின் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் எடுத்து கூறினார்கள். மேலும் அவரது உடல் உறுப்புகளை உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு பொருத்தி மறு வாழ்வு கொடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து நாகராஜனின் ஒரு சிறுநீரகம், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.

Next Story