வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பறிமுதல்
குமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் சோதனை
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி விளவங்கோடு பறக்கும் படை தாசில்தார் சந்திரசேகர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் மற்றும் போலீசார் நேற்று கப்பத்தான்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போ மற்றும் காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 490-ம், டெம்போவில் ரூ.78 ஆயிரத்து 835 இருந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விளவங்கோடு பறக்கும் படை அதிகாரி டான்சிலின் மற்றும் போலீசார் பிரபா, கிறிஸ்டிபாய் ஆகியோர் களியல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதுவரை ரூ.3½ கோடி பறிமுதல்
மேலும் அவர்கள் குழித்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்குளம் பகுதியில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அன்றைய நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை 6 தொகுதிகளிலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 57 லட்சத்து 17 ஆயிரத்து 492 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story