பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் வசித்து வருபவர் முத்துசாமி (வயது 55). விவசாயியான இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வயலுக்கு சென்றார். பின்னர் மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் அருகில் இருந்த இரும்புப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் மொத்தம் ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக முத்துசாமி வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களில் பசும்பலூரில் நடைபெற்ற 3-வது திருட்டு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story