தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதிப்பு-ஜி.கே.வாசன் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கொங்கணாபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
எடப்பாடி:
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கொங்கணாபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
பொதுக்கூட்டம்
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் நேற்று இரவு த.மா.கா. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் எடப்பாடி தொகுதி வளர்ந்து, உயர்ந்து உள்ளது. அவரை முதல்-அமைச்சராக்குவது தமிழகத்திற்கே நல்லது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில்தான் பெண்களுக்கு அதிகமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு பாதிப்பு
தி.மு.க.வை சேர்ந்த ஒருவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளார். அந்த தி.மு.க. நிர்வாகியின் பெயரை கூறுவதற்கு கூட நாகூசும். அவர் போன்ற நபரை கொண்ட தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
தேர்தல் தோல்வி பயத்தால் தி.மு.க.வினர், அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர். விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை தி.மு.க.வினர் உணரவில்லை.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். நல்லாட்சி தொடரவேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, கோதாவரி, காவிரி, அத்திக்கடவு-அவினாசி திட்டங்களுக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க. அரசு தான்.
அமைதியான ஆட்சி
குறை சொல்வதையே முழுநேர பணியாக தி.மு.க. கொண்டுள்ளது. இது தொடர்ந்தால் மக்கள் 100 சதவீதம் தி.மு.க.வை புறக்கணிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு நாங்கள் கொடுக்கும் ஆதரவு, அமைதியான ஆட்சிக்கான ஆதரவு.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் த.மா.கா. தலைவர் சுசிந்திரகுமார், மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், மாநில செயலாளர் வக்கீல் செல்வம், அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் பொன்னையன், செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி, ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, பேரூர் செயலாளர் சாமி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story