பெண்ணை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டிக்காதது ஏன்?- சேலம் பிரசாரத்தில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
பெண்ணை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டிக்காதது ஏன் என்று சேலம் பிரசாரத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி பேசினார்.
சேலம்:
பெண்ணை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டிக்காதது ஏன் என்று சேலம் பிரசாரத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி பேசினார்.
அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் ரா.அருள் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று இரவு சூரமங்கலம் உழவர் சந்தை அருகே பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயியான எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி உள்ளார். மீண்டும் அவரே முதல்-அமைச்சராக வருவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த சட்டசபை தேர்தல் விவசாயியான எடப்பாடி பழனிசாமிக்கும், அரசியல் வியாபாரியான மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும் தேர்தல் ஆகும்.
மன்னிக்க முடியாத குற்றம்
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா நேற்று சென்னையில் பிரசாரத்தின் போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல மறைந்த அவருடைய தாயாரையும் கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதன் மூலம் தமிழக பெண்கள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் தி.மு.க.வை புறக்கணித்து விட்டார்கள்.
பெண்ணை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காமல் அமைதியாக உள்ளார். மேலும் பெண்ணுரிமை, பெண்கள் பாதுகாப்பு என்று பேசி வரும் அதன் கூட்டணி தலைவர்களும் கண்டிக்காதது ஏன்? பா.ம.க.வில் யாராவது பெண்களை பற்றி தவறாக பேசினால் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதுடன், அடித்து உதைத்திருப்பேன்.
பாதுகாப்பு கிடைக்காது
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற மிகப்பெரிய தகுதி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற தகுதியை விட வேறு எந்த தகுதியும் கிடையாது. ராமதாஸ் 40 ஆண்டுகள் காலம் போராடி பின்தங்கிய சமுதாயமான வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமியால் பெற்றுள்ளார்.
இதேபோல் பின்தங்கிய அனைத்து சமுதாய மக்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டை பெற்று கொடுப்போம். அது எங்கள் நமது கடமையாகும். மேட்டூர் அணை உபர்நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டது.
அத்தியாவசியமாக பார்க்கிறேன்
இதையடுத்து முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்து 100 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி உள்ளார். பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி உபரிநீரை நிரப்பினால் சேலம் மாநகருக்கு குடிநீர் பஞ்சமே இருக்காது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நான் இலவசமாக பார்க்கவில்லை, அத்தியாவசியமாக பார்க்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி விவசாயி ஆட்சி. தி.மு.க. ஆட்சி குறுநில மன்னர்கள் ஆட்சி. அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்லும் இடமெல்லம் அமோக வரவேற்பு இருப்பதால் தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜலகண்டாபுரம், ஓமலூர்
இதையடுத்து அவர் சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை அருகே வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேடபாளர் ஜி.வெங்கடாஜலத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜலகண்டாபுரத்திலும், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மணியை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story