சேலத்தில் சிறுமியுடன் மகன் காதல் திருமணம்: போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பெண் தற்கொலை- உறவினர்கள் சாலை மறியல்
சேலத்தில் சிறுமியுடன் மகன் காதல் திருமணம் செய்ததால் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற வேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலத்தில் சிறுமியுடன் மகன் காதல் திருமணம் செய்ததால் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற வேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
சேலம் அன்னதானப்பட்டி அகத்தியர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூரணம் (வயது 44). இவர்களது மகன் அஜித்குமார் (21), செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பார்சல் கட்டும் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் 16 வயது சிறுமியும் வேலை செய்து வந்ததால் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த 10-ந் தேதி அந்த சிறுமியுடன் அஜித்குமார் திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தரப்பில் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார் மற்றும் சிறுமியை தேடி வருகின்றனர்.
பெண் தற்கொலை
இந்த நிலையில், அஜித்குமார் தங்கியிருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு அவரது தாய் சம்பூரணத்தை போலீசார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சம்பூரணம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இதனிடையே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கொடுமைப்படுத்தியதால் தான் சம்பூரணம் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மகன் காதல் திருமணம் செய்ததால் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற வேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story