கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து கே.வி.தங்கபாலு பிரசாரம்; கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து கே.வி.தங்கபாலு பிரசாரம் செய்தார். கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.
ராஜேஷ்குமார் பிரசாரம்
கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று புதுக்கடை பஸ் நிலையத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர் மாடச்சேரி, சரவிளை, பார்த்திவபுரம், பிளாக் ஆபீஸ், காடஞ்சேரி, மங்காடு திருப்பு, வண்ணான்குளம், புன்னமூடு, மணலி, திருமலை கோவில், வடக்கு தெரு, கை சூண்டி, மூன்று முக்கு, அட்டகுளம், மணியாரங்குன்று, அரசுகுளம், அம்சி, முக்காடு, பைங்குளம், கூட்டாலுமூடு, அனந்தமங்கலம், பரக்காணி, வேட்டமங்கலம், தேங்காப்பட்டணம், ரோட்டரி நகர், பனங்கால் முக்கு, நெடுந்தட்டு, முள்ளூர்துறை தேங்காப்பட்டணம் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் பொது மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவும் அவருக்கு ஆதரவாக கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டினார்.
கே.வி.தங்கபாலு ஆதரவு திரட்டினார்
பிரசாரத்தின் போது கே.வி.தங்கபாலு பேசியதாவது:-
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் நமது நாடு வளர்ச்சி அடைந்தது. அதை பா.ஜனதா அரசு மழுங்க செய்தது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கலைஞரின் தி.மு.க. அரசு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் வைத்திருந்தது. இந்திய அளவில் 3-ம் இடத்தில் இருந்தது. தற்போது அ.தி.மு.க. அரசு அதை 19-ம் இடத்திற்கு தள்ளியுள்ளது. இதை மாற்றி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நீங்கள் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்
மேலும் ராஜேஷ்குமார் பிரசாரத்தின் போது பேசியதாவது:-
கிள்ளியூர் தொகுதியின் வளர்ச்சிக்காக நிறைய நிதி பெற்று பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் ஏராளமானோருக்கு வீட்டுமனை பட்டா இல்லை என்ற குறை உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனவுடன் வீட்டுமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா பெற்று கொடுக்கப்படும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாத அனைவருக்கும் அரசின் இலவச வீடு
திட்டத்தில் வீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். புதுக்கடையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.
கை சின்னத்தில் வாக்களியுங்கள்
மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தவும், வேலைவாய்ப்புகள் பெருகிடவும் நீங்கள் அனைவரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான ராஜேஷ் குமார் ஆகிய எனக்கும், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான விஜய் வசந்துக்கும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story