திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தப்பி ஓடிய கைதி திண்டுக்கல்லில் சிக்கினார்; சங்கிலி பறிப்பு வழக்கில் மீண்டும் கைது
திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து தப்பிய கைதி சிக்கினார். சங்கிலி பறிப்பு வழக்கில் அவரை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து தப்பிய கைதி சிக்கினார். சங்கிலி பறிப்பு வழக்கில் அவரை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
கைதி தப்பி ஓட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தாலிப்ராஜா என்கிற ராஜா (வயது 28). இவரை சங்கிலி பறிப்பு வழக்கில் கடந்த மாதம் திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் ராஜாவுக்கு கடந்த 2-ந் தேதியுடன் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக திண்டுக்கல் போலீஸ்காரர் தேவராஜ், ஆயுதப்படை பெண் போலீஸ் கங்காதேவி ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்கு வந்தனர்.
சிறையில் உரிய ஆவணங்களை காட்டி ராஜாவை வெளியே அழைத்து வந்தனர். பின்னர் ஜெயில்கார்னரில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டு திருச்சி மத்திய பஸ்நிலையத்துக்கு வந்து இறங்கினர். அங்கு தஞ்சை பஸ்கள் நிற்கும் இடம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, பஸ் ஒன்று குறுக்கே வந்ததால் போலீசார் இருவரும் முன்னே சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜா அங்கிருந்து தப்பி சென்றார்.
மீண்டும் கைது
அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து போலீஸ்காரர் தேவராஜ் அளித்த புகாரின்பேரில், கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கைதி ராஜாவை தேடி வந்தார். இதற்கிடையே தப்பி ஓடிய ராஜா கடந்த 22-ந் தேதி மீண்டும் சங்கிலி பறிப்பு வழக்கில் திண்டுக்கல் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் ராஜா மீது ஏற்கனவே திருச்சியில் இருந்து தப்பிய வழக்கு நிலுவையில் இருந்ததால் கோர்ட்டு உத்தரவுடன், திண்டுக்கல் சிறைக்கு சென்று அங்கு அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் ஆஜர்படுத்தி அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story