40 ஆண்டுகளுக்கு பின் வில்வ தீர்த்த குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி


40 ஆண்டுகளுக்கு பின் வில்வ தீர்த்த குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 28 March 2021 8:05 AM IST (Updated: 28 March 2021 8:05 AM IST)
t-max-icont-min-icon

40 ஆண்டுகளுக்கு பின் வில்வ தீர்த்த குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம்,

40 ஆண்டுகளுக்கு பின் வில்வ தீர்த்த குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

வில்வ தீர்த்த குளம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நவதீர்த்த குளங்களில் ஒன்று வில்வ தீர்த்த குளம். இக்குளம் திருவானைக்காவல் பகுதியில் பெருமாள்புரத்தில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழாவின் 8-ம் நாள் வில்வதீர்த்த குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி, கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம்.

ஆனால் காலப்போக்கில் இக்குளத்தில் நடைபெற்று வந்த நம்பெருமாள் தீர்த்தவாரி உற்சவம் கடந்த 40 ஆண்டுகாலமாக நின்று போனது. நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவர ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து வில்வகுளத்தை சுற்றி இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பின் தீர்த்தவாரி

இந்நிலையில் பங்குனி தேர்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று வில்வ தீர்த்த குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி நடைபெற்றது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 10 மணிக்கு வில்வதீர்த்த குளத்திற்கு வந்தார். அங்கு தீர்த்தவாரி கண்டருளினார்.

வையாளி கண்டருளினார்

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 8.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

Next Story