2024 போலீசார் தபால் வாக்குப்பதிவு
தேனி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 24 போலீசார் தபால் வாக்கு பதிவு செய்தனர்.
தேனி:
தபால் வாக்கு
தேனி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.
மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களாக 7 ஆயிரத்து 492 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 5 ஆயிரத்து 5 பேருக்கு நேற்று முன்தினம் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.
அவர்களில் 2,936 பேர் தபால் வாக்கு செலுத்தினர்.
நேற்று தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு நடந்தது.
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, பெரியகுளம் தொகுதிக்கு தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி தொகுதிக்கு முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் தொகுதிக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கவுதியா கல்லூரி ஆகிய 4 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
2,024 பேர் வாக்குப்பதிவு
போலீஸ் துறையை பொறுத்தவரை ஆண்டிப்பட்டியில் 699 பேர், பெரியகுளத்தில் 638 பேர், போடியில் 649 பேர், கம்பத்தில் 722 பேர் என மொத்தம் 2,708 பேர் தபால் வாக்கு கேட்டு அதற்குரிய படிவத்தை சமர்ப்பித்திருந்தனர்.
அவர்களுக்கு தபால் வாக்கு ஒதுக்கப்பட்டது.
நேற்று ஆண்டிப்பட்டி தொகுதியில் 519 பேர், பெரியகுளம் தொகுதியில் 491 பேர், போடி தொகுதியில் 495 பேர், கம்பம் தொகுதியில் 519 பேர் என மொத்தம் 2,024 போலீசார் தங்களின் தபால் வாக்கை பதிவு செய்தனர்.
இதற்காக தபால் வாக்குப்பதிவு நடந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீசார் சமூக இடைவெளியுடன் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தனர்.
வாக்குப் பதிவை தொடர்ந்து வாக்குப் பெட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story