வேதாரண்யம் தொகுதியில் 20 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
நான் மீண்டும் வெற்றி பெற்றவுடன் வேதாரண்யம் தொகுதியில் 20 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர், தினமும் மக்களை நேரில் சந்தித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கடந்த 5 ஆண்டுகளில் வேதாரண்யம் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
நான் கடந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டபோது இந்த தொகுதி மக்கள் எனக்கு தங்களது பெருவாரியான ஆதரவை தந்து என்னை இந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்தனர். அவர்கள் அன்பினாலும், ஆதரவாலும் வெற்றி பெற்ற நான் அமைச்சரவையில் இடம் பெற்று கைத்தறி மற்றும் துணிநூல் துைற அமைச்சராக பதவியேற்று துறையின் சார்பில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.
நான் தமிழகத்திற்கு அமைச்சராக இருந்தாலும் எனது கவனம் முழுவதும் வேதாரண்யம் தொகுதியை பற்றியும், தொகுதி மக்களின் நலன்கள் குறித்துமே இருக்கும். இந்த தொகுதி மக்களை எனது குடும்பத்தினரைப்போன்று எண்ணி நான் இதுவரையில் செயலாற்றி வருகிறேன். இனிமேலும் அப்படியே செயலாற்றுவேன். கடந்த 5 ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தலைஞாயிறில் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரூ.1000 கோடியில் மெகா உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.100 கோடியில் வேதா ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆயத்த ஆடை பூங்காவின் மூலம் எண்ணற்ற மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. செம்போடையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் 512 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 1,344 வீடுகளை கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக 1,158 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 9 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் கால்நடை மருத்துவமனை, கிளை கால்நடை மருந்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
உம்பளச்சேரி, துளசாபுரம், நாலுவேதபதி, காடந்தேத்தி ஆகிய பகுதிகளில் மறு குடியமர்வு வீடுகள் 138 எண்ணிக்கையில் கட்டப்பட்டுள்ளன. வானவன்மகாதேவி, வண்டுவாஞ்சேரியில் தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூர் தொழில் முனைவோர் ஆயத்த ஆடை உற்பத்தியை தொடங்கியுள்ளேன்.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல பல கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அடப்பாறு தடுப்பணை, அரிசந்திரா ஆறு தடுப்பணை, வேதாரண்யம் கால்வாய் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.
இப்படி வேதாரண்யம் தொகுதியில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்கள், எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகள் தொடர, திட்டங்களை செயல்படுத்த இந்த தொகுதி மக்கள் தங்களது ஆதரவை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து என்னை தேர்வு செய்வார்கள் என்பதில் எனக்க சிறிதளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் மீண்டும் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த உள்ளீர்கள்?
பதில்:- நான் மீண்டும் வெற்றி பெற்றதும் வேதாரண்யம் தொகுதியில் 20 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்பு நடப்பு ஆண்டே எனது முயற்சியில் அறக்கட்டளை மூலமாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு கருணை இல்லம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். தேவையான இடங்களில் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும். சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களின் திறனுக்கு ஏற்ப மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க வசதிகள் செய்து தரப்படும்.
தொகுதி முழுவதும் பசுமை போர்வை என்ற சூழலை உருவாக்க மரக்கன்றுகள் நடுவது ஒரு இயக்கமாகவே நடத்தப்படும். மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, உணவு அளிக்க வசதியாக போதுமான அளவில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
கோடியக்கரை-வேதாரண்யம் 100 அடி வாய்க்கால், வாய்மேடு மீனவர்கள், அண்ணாப்பேட்டை மீனவர்கள் பயன்பெறும் வகையில் வளவனார் தேவணை முதல் முகத்துவாரம் வரை தூர்வாரப்படும். ஆயக்காரன்புலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தரப்படும். தீ பிடிக்க ஏதுவான வீடுகள் அகற்றப்பட்டு தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தரப்படும். நிரந்தர திறன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு பல்வகை திறன் பயிற்சி வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க ஏற்பாடு செய்யப்படும். மானாவாரி நிலங்களுக்கு மின் இறவை பாசன திட்டம் நிறைவேற்றப்படும். வேதாரண்யம் தொகுதியில் தோட்டக்கலை உற்பத்தியை விற்பனை செய்ய மாபெரும் சந்தை அமைக்கப்படும்.
உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால ஓய்வூதியம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சந்தைப்படுத்த முடியாத சூழலில் இருப்பு வைக்க ஏதுவாக குளிர்பதன கிடங்கு அமைத்து தரப்படும். மிகப்பெரிய நீர்நிலைகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி கரைகளை உயர்த்தி, கதவணை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயார் செய்யப்படும்.
சிறு, குறு தொழில்முனைவோர், தொழில் செய்ய முனைவோர், வியாபாரிகள், வணிகர்கள் அனைவருக்கும் வங்கிக்கடன் வசதி செய்து தர முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை இங்கேயே அவித்து அரைத்து தர நவீன அரிசி ஆலை கொண்டு வரப்படும். இ-சேவை மையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படும். மாசு இல்லாத நிலையை உருவாக்கிட திடக்கழிவு மேலாண்மை மற்றும் தகன எரிவாயு மேடை தலைஞாயிறில் அமைத்து தரப்படும்.
வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணைக்குட்டைகள் அதிகமாக உருவாக்கப்படும். இதன்மூலம் விவசாயம், மீன்வளர்ப்புக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். இயற்கை உரம் தயார் செய்யப்படும். இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூரிலேயே விற்பனை வாய்ப்பு கூட்டுறவு பண்டகசாலை மூலமாக செய்து தரப்படும். இந்த பணியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story