போடி தொகுதியில் சூறாவளி பிரசாரம்: ’தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் கருணாநிதி’ துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


போடி தொகுதியில் சூறாவளி பிரசாரம்: ’தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் கருணாநிதி’ துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 28 March 2021 10:13 PM IST (Updated: 28 March 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் கருணாநிதி என்று போடி தொகுதியில் நடந்த பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி, 

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக போட்டியிடுகிறார். போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்தார். 

மாரியம்மன்கோவில்பட்டியில் நேற்று அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருச்செந்தூர், முத்துத்தேவன்பட்டி, மின்நகர், வீரபாண்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரசாரத்தின் போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. தி.மு.க.வும் ஆட்சி செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர். 3 முறை முதல்-அமைச்சராக, யாராலும் வெல்ல முடியாத முதல்அமைச்சராக தன்னிறைவு திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் தந்து சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்.ஜி.ஆருக்கு பின்னர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்று, நல்லாட்சி, பொற்கால ஆட்சியை நடத்தினார்.

2011ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்று செய்த சமூக பாதுகாப்பு திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களின் பயனாக, 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அளிக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். ஆனால் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

2006ம் ஆண்டு தி.மு.க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் நிலம் கொடுக்காததால், சட்டசபையில் கருணாநிதியிடம் நான் கேள்வி எழுப்பினேன். தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என்று கேட்டேன். அப்போது அவர் கையளவு நிலமாவது கொடுப்பேன் என்றார். ஆனால் அதுவும் கொடுக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் கருணாநிதி.

அதனால் தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கள்ளநோட்டு என்று சொல்கிறோம். அது செல்லாத நோட்டு. நமது தேர்தல் அறிக்கை தான் நல்ல நோட்டு. 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினோம். ஏழை பெண்களின் திருமணத்துக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கினோம். தற்போது நிதி உதவியை உயர்த்தி வழங்குவோம் என்று சொல்லி இருக்கிறோம். நிச்சயமாக உயர்த்தி வழங்குவோம்.

அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். உறுதியாக அந்த திட்டத்தை நிறைவேற்றுவோம். முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றோம். நிச்சயம் உயர்த்தி வழங்குவோம். மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

இந்த தொகுதியில் 2 முறை என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தீர்கள். உங்களில் ஒருவனாக இருந்து சட்டமன்ற உறுப்பினராக எனது கடமையை முழுமையாக, நிறைவாக செய்துள்ளேன். உங்களில் ஒருவனாக இருந்து மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா., பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story