பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "அரோகரா" கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர்.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று பங்குனி உத்திரம் ஆகும்.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.
மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சிறப்பு பூஜைகள், தீபாராதனை
முன்னதாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பகல் 11 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.
மாலை 4 மணிக்கு விநாயகர், அஸ்திர தேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்று சிறிய தேர்களை பக்தர்கள் இழுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.
தேரோட்டம்
இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி, அறங்காவலர்கள் செல்ல முத்தையா, கமலக்கண்ணன், சேகர், லதா ஸ்ரீதர், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கார்த்தி, கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், ஆனந்த விலாஸ் உரிமையாளர் முனியாண்டி, ஜெயம் லாட்ஜ் உரிமையாளர் சரவணன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமார் மனைவி மெர்சி செந்தில்குமார், வி.பி.எஸ் கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் பெரியசாமி, ஜவகர் ரெசிடென்சி உரிமையாளர் மனோகரன், கோவில் செயற்பொறியாளர் வெங்கடேஷ், என்ஜினீயர்கள் குமார், பாலாஜி, கண்காணிப்பாளர்கள் முருகேசன், சண்முகவடிவு, மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் நகர முடியாமல் நின்றபோது, பழனி கோவில் யானை கஸ்தூரி அதனை முட்டித் தள்ளியது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரி வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 6 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் "அரோகரா" கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story