பழனி முருகன் கோவிலுக்கு திரும்பிய கஸ்தூரி யானை
மேட்டுப்பாளையத்தில் நடந்த புத்துணர்வு முகாம் முடிந்து, பழனி முருகன் கோவிலுக்கு கஸ்தூரி யானை திரும்பியது.
பழனி:
தமிழக அரசு சார்பில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கியது.
48 நாட்கள் நடத்த இந்த முகாமில் சத்தான உணவு, நடைபயிற்சி சீரான ஓய்வு, ஷவர் குளியல் போன்றவை யானைகளுக்கு அளிக்கப்பட்டன. தற்போது முகாம் நிறைவடைந்த நிலையில் பிரியாவிடை பெற்ற ஒவ்வொரு யானையும் அந்தந்த கோவில்களுக்கு லாரிகள் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
பழனிக்கு திரும்பிய கஸ்தூரி யானை
அதன்படி பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி நேற்று அதிகாலை பழனியில் உள்ள காரமடை தோட்டத்துக்கு வந்்தது. பின்னர் நேற்று காலை பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு யானையை வரவழைத்து பழங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் சிறப்பு பூஜை செய்து யானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. புத்துணர்வு முகாமுக்கு செல்லும்போது 4 ஆயிரத்து 600 கிலோவாக இருந்த யானையின் எடை தற்போது 110 கிலோ குறைந்து 4 ஆயிரத்து 490 கிலோவாக உள்ளது.கோவில் யானை வரவேற்பு நிகழ்ச்சியில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தலைவி போல...
பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 54 வயதாகும் கஸ்தூரி யானைதான் முகாமில் கலந்துகொள்ள வரும் யானைகளுக்கு எல்லாம் தலைவிபோல் செயல்படும். மேலும் அங்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளது என்றார்.
Related Tags :
Next Story