ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்- சாலை மறியல் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் நேற்று அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன் தலைமை தாங்கினார்.
மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், திண்டிவனம் நிர்வாகிகள் தளபதி ரவி, டி.கே. குமார், பிரகாஷ், ரூபன் ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், அன்பழகன், தேவநாதன், ராஜேந்திரன் ஜனார்த்தனன், பாலச்சந்திரன் மற்றும் உதயகுமார், ராஜாமணி, அண்ணாதுரை, மகளிர் அணி சி.எம். மீனா, குப்பு ராமதாஸ், எழிலரசி, ஜெயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டு ஆ.ராசாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தீக்குளிக்க முயற்சி
இதேபோல் ஆ.ராசாவை கண்டித்து, மயிலம் ஒன்றிய அ.தி.மு.க. வினர் கூட்டேரிப்பட்டு கிளை செயலாளர் வெங்கடாஜலபதி தலைமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடாஜலபதி ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என்று கூறி, தான் எடுத்து வந்த மண்எண்ணெய் கேனை திறந்து தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்கமுயன்றார்.
உடன் அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார், அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். தொடர்ந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
30 பேர் மீது வழக்கு
விக்கிரவாண்டி பஸ்நிலையத்தில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மாவட்ட கழக துணை செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். நகர மகளிரணி செயலாளர் செங்கேணி, நகர துணை செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில், நகர பேரவை செயலாளர் பலராமன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைதலைவர் ரமேஷ், நகர தலைவர் விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரகாஷ், ஆசிரியர் பேரவை மாநில செயலாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 30 பேர் மீது விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்தார்.
செஞ்சி
செஞ்சி கூட்டு ரோட்டில் அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் துடைப்பங்களுடன் பங்கேற்று ஆ.ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story