ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 28 March 2021 11:06 PM IST (Updated: 28 March 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா பால் கம்பம் நடப்பட்டு தேர் கட்டும் பணிகள் நடந்தது. இதையடுத்து, கடந்த 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில், அங்குரார்ப்பணம், கொடியேற்றத்துடன் விழா தொடங்கின.

பின்னர் தினமும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம் ஆகியவற்றில் சாமி திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.  நேற்று முன்தினம் இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நாளான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில், சாமியை வைத்து, பக்தி கோஷங்கள் முழங்க தேர் இழுத்து செல்லப்பட்டது. ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கல்யாண சூடேஸ்வரர் தேர் கமிட்டி தலைவருமான கே.ஏ.மனோகரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 
முதலில், விநாயகர் சிறிய தேரும், அதனை தொடர்ந்து சந்திரசூடேஸ்வரரின் பெரிய தேரும், பின்னர் மரகதாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். இதில் தொழில் அதிபர்கள் ஆனந்தய்யா, முத்துகிருஷ்ணன், கே. திம்மராஜ், ஆர்.பாபு, சுப்பிரமணியன், என்.ராஜி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தெப்ப உற்சவம்
இதில் ஓசூர், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) இரவு தேர்பேட்டையில் ராவண உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு ஓசூர் பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Next Story