தேவகோட்டையில் தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு


தேவகோட்டையில் தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 28 March 2021 6:55 PM GMT (Updated: 28 March 2021 6:55 PM GMT)

6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தேவகோட்டையில் தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

தேவகோட்டை,

6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தேவகோட்டையில் தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை ராம் நகர் பிரிட்டிஷ் காலனியில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கருதாவூரணி பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
சீல் வைப்பு
அதோடு கொரோனா பாதித்தவர்கள் வசித்த ராம்நகர் பிரிட்டிஷ்காலனி, கருதாவூரணி ஆகிய 2 தெருக்களும் வெளியாட்கள் நுைழயாமல் இருக்க இது தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகையை வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் அங்கு சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து சுகாதார ஆய்வாளர் ராஜாமணி ராஜா கூறுகையில், “கொரோனா பாதித்தவர்கள் தங்கி இருந்த 2 தெருக்களும் சீல் வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் முன் வர வேண்டும்.” என்றார்.

Next Story