ஈரோடு அருகே உரிய ஆவணம் இல்லாததால் தொழிலாளியிடம் இருந்து ரூ.4½ லட்சம் பறிமுதல்


ஈரோடு அருகே உரிய ஆவணம் இல்லாததால் தொழிலாளியிடம் இருந்து ரூ.4½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2021 1:55 AM IST (Updated: 29 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே, உரிய ஆவணம் இல்லாததால் தொழிலாளியிடம் இருந்து ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு
ஈரோடு அருகே, உரிய ஆவணம் இல்லாததால் தொழிலாளியிடம் இருந்து ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரோடு அருகே உள்ள சோலார் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.4½ லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்து 700 இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தது, ஈரோட்டை சேர்ந்த மைதீன் என்பதும், அவர் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. அதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த பணம் மாவட்ட கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story