பங்குனி உத்திரதிருவிழா: சேலத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


பங்குனி உத்திரதிருவிழா: சேலத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 29 March 2021 4:05 AM IST (Updated: 29 March 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

சேலம்:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பங்குனி உத்திர திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன்படி சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிறப்பு பூஜைகள்
இதே போன்று சேலம் பெரமனூரில் உள்ள ஆறுமுக கந்தசாமி கோவிலில் உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு திருக்கல்யாண அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போன்று சேலம் குமரகிரி பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். வள்ளி-தெய்வானை அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பால்குட ஊர்வலம்
விழாவையொட்டி அம்மாபேட்டை, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களுக்கு பால்குடம் எடுத்துச்சென்று வழிபட்டனர்.
இதே போன்று காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் இரவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று ஊத்துமலை முருகன் கோவில், கந்தாசிரமம் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி முருகன் கோவிலுக்கு பலர் காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.
கருப்பூர்
இதே போல சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கருப்பூர் கந்தசாமி திருக்கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் பூஜையும் நடந்தது. இரவில் சாமி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story