3871 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம்


3871 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம்
x
தினத்தந்தி 29 March 2021 4:42 AM IST (Updated: 29 March 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 871 பேர் தங்கள் இருப்பிடத்திலேயே இருந்தபடி தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்று தபால் வாக்குப்பதிவு தொடங்குகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 871 பேர் தங்கள் இருப்பிடத்திலேயே இருந்தபடி தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை தபால் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
3,871 பேர் விருப்பம்
கொரோனா தொற்று காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் அவர்கள் விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டு அவர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெற சட்டமன்ற தொகுதி வாரியாக தனிக்குழுக்கள் அமைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 441 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 430 மூத்த வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 871 பேர் தங்கள் இருப்பிடத்திலேயே இருந்தபடி தபால் வாக்கு செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்து படிவம் 12-டி யை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்துள்ளார். வாக்காளர்களின் இருப்பிடத்துக்கு சென்று தபால் வாக்குச்சீட்டு வழங்கி மீண்டும் அவர்களிடம் இருந்து பெறுவதற்கு தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
155 வாக்கு அலுவலர் குழுக்கள்
அதன்படி தாராபுரம் தொகுதியில் 657 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். அங்கு 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கேயம் தொகுதியில் 335 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அங்கு 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவினாசி தொகுதியில் 661 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதியில் 166 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தெற்கு தொகுதியில் 280 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்லடம் தொகுதியில் 398 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் 15 குழுக்களும், உடுமலை தொகுதியில் 771 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் 30 குழுக்களும், மடத்துக்குளம் தொகுதியில் 603 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் 20 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 871 பேருக்கு 155 வாக்கு அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் வாக்குச்சாவடி அலுவலர், மண்டல அலுவலர், நுண்பார்வையாளர், போலீசார், வீடியோகிராபர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுக்கள் இன்று திங்கட்கிழமைமற்றும் வருகிற 31 ந் தேதி ஆகிய இருநாட்கள் வாக்காளர்களின் இருப்பிடத்துக்கு சென்று தபால் வாக்குச்சீட்டுகளை வழங்கி அவர்கள் வாக்களித்த பிறகு வாக்குச்சீட்டுகளை திரும்ப பெற்று ஒப்படைக்க உள்ளனர்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story